فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُوا۟ ٱللَّهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளியவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.) அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதிலிருந்து குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர்புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (விலகி)னார்கள். நிச்சயமாக தாங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தவர்கள், "அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்" என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, அவர் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளி குடித்தவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.)” ஆக, அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும்) அதிலிருந்து (அதிகம்) குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்ட (கையளவு தண்ணீர் குடித்த)வர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர் புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (போரில் கலந்து கொள்ளாமல் விலகி)னார்கள். எவர்கள், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தார்களோ, அவர்கள் கூறினார்கள்: “அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதியினால் வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi249. பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) ‘‘நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தனது கைக்கொண்டு ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்து விட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் ‘‘இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை'' என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால், அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி ‘‘(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்.