caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 229

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:229

ٱلطَّلَٰقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَٰنٍ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا ٱفْتَدَتْ بِهِۦ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிவாகரத்து இருமுறை ஆகும். (தவணைக்குள்) நல்ல முறையில் தடுத்து (மனைவிகளாக) வைத்தல் அல்லது அழகிய முறையில் விட்டுவிடுதல் (கடமையாகும்). நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால்,) அல்லாஹ்வின் சட்டங்களை தாங்கள் நிலைநிறுத்த முடியாது என்று அவ்விருவரும் பயந்தாலே தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்தமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், அவள் எதன் மூலம் (தன்னை) விடுவித்தாளோ அதில் அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எனவே இவற்றை மீறாதீர்கள். எவர்(கள்) அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Tamil Translation - Omar Sharif(மீட்பதற்கு அனுமதியுள்ள) விவாகரத்து இருமுறை (மட்டும்) ஆகும். (அந்த தவணைக்குள்) நல்ல முறையில் (அவளை) தடுத்து (மனைவியாக) வைத்தல் வேண்டும். அல்லது அழகிய முறையில் விட்டுவிடுதல் வேண்டும். (ஆண்களாகிய) நீங்கள் (பெண்களாகிய) அவர்களுக்குக் கொடுத்ததிலிருந்து (-மஹ்ர் தொகை அல்லது மஹ்ர் பொருளிலிருந்து) எதையும் திரும்ப வாங்குவது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், திருமண வாழ்க்கையில் மீண்டும் இணைந்தால்) அல்லாஹ்வின் சட்டங்களை அவ்விருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று அவ்விருவரும் பயந்தாலே தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்தமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், அவள் (தனக்கு கொடுக்கப்பட்ட மஹ்ரிலிருந்து) எதை (திரும்ப) கொடுத்து (தன்னை) விடுவிப்பாளோ அதில் அவ்விருவர் மீதும் அறவே குற்றம் இல்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi229. (ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). ஆகவே, (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது ஒரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதில் எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால், நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70